
வாஷிங்டன், மார்ச்-27-ஈரானின் எரிசக்தி ஆலைகளுக்கு எதிரான தாக்குதல்களை தற்காலிகமாக 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த இடைநிறுத்தம் உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 6-ஆம் தேதி இரவு 8 மணி வரை நீடிக்கும் என, தனது Truth Social சமூக ஊடகப் பதிவில் அவர் குறிப்பிட்டார்.
“இது ஈரான் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஏற்ப எடுக்கப்பட்ட முடிவு. பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் நடைபெறுகின்றன” என்றும் அது பற்றி ஊடகங்களில் வெளியாகும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஈரான் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக ஏற்கனவே ட்ரம்ப் அறிவித்த நிலையில், அது இன்றோடு முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில், மேலும் ஒரு வாரம் அதனை நீட்டிக்குமாறு ஈரான் கேட்டதாகவும், ஆனால் 10 நாட்கள் வரை அதனை தாம் நீட்டித்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
Hormuz நீரிணையைப் பயன்படுத்த 10 எண்ணெய்க் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியதால், இந்த ‘கரிசனத்தை’ காட்டுவதாக ட்ரம்ப் கூறிக் கொண்டார்.
வாஷிங்டனுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என தெஹ்ரானை மேற்கொள்காட்டி தொடர்ந்து செய்திகள் வெளிவரும் நிலையில், ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் சொல்வது ஒருவேளை உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்த ‘இடைவேளை’, அமெரிக்கா–ஈரான் உறவுகளில் முக்கியமான தருணமாகக் கருதப்படுகிறது.



