Latestமலேசியா

பாரிசானா, பெரிக்காத்தானா? திருப்புமுனையில் மஇகா; மூத்த பத்திரிகையாளர் பெரியசாமி கருத்து

கோலாலாம்பூர், ஏப்ரல்-3 – 1946 முதல் ம.இ.கா, மலேசிய இந்தியச் சமூகத்தின் முதுகெலும்பாக திகழ்ந்து வந்துள்ளது.

ஆனால் இன்று, அந்தக் கட்சி ஒரு முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறது: அதாவது பாரம்பரியத்தை காப்பாற்றுமா அல்லது வரலாற்றில் மறைந்துவிடுமா? என்கிறார் சமூக – அரசியல் ஆய்வாளர் டத்தோ எம். பெரியசாமி.

மஇகா, நீண்ட காலமாக தேசிய முன்னணியான பாரிசான் நேஷனலுடன் இணைந்திருந்தது.

ஆனால் கடந்தாண்டு 79-வது தேசியப் பொதுப் பேரவையில், பாரிசானை விட்டு விலகி, எதிர்கட்சியான பெரிக்காத்தான் நேஷனலில் சேரும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ம.இ.கா தங்கள் கூட்டணியில் இணைந்துவிட்டதாக பெரிக்காத்தான் தலைமையும் அண்மையில் அறிவித்தது; ஆனால் ம.இ.கா தலைமை அதனை மறுத்து, இன்னமும் தேசிய முன்னணியிலேயே நீடிப்பதாக தெளிவுப்படுத்தியது.

இதற்கிடையில் தான், பாஸ் கட்சியின் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சம்சுரி மொக்தார், பெரிக்காத்தான் தலைவராக நியமிக்கப்பட்டார்; இது, ம.இ.காவின் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

அதாவது, இந்தியச் சமூகம் பாஸ் தலைமையிலான கூட்டணியை ஏற்குமா என்ற கேள்வியால், பெரிக்காத்தானில் இணையும் முடிவில் ம.இ.கா இலேசாக பின்வாங்குவதாகத் தெரிகிறது.

15-ஆவது பொதுத் தேர்தலில், பெரும்பாலான இந்திய வாக்காளர்கள் DAP மற்றும் PKR போன்ற நம்பிக்கைக் கூட்டணிக் கட்சிகளுக்கே ஆதரவளித்தனர்; எனவே, தேசிய அரசியல் நீரோட்டத்தில் ம.இ.காவின் உயிர்வாழ்வு எந்தக் கூட்டணியில் சேருகிறது என்பதில் அல்ல; மாறாக, விலகிச் சென்ற இந்திய வாக்காளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவதில்தான் உள்ளது என, பெரியசாமி கூறுகிறார்.

16-ஆவது பொதுத் தேர்தல் நெருங்கும் நிலையில், ம.இ.கா எடுக்கப் போகும் எந்தவொரு முடிவும் மலேசிய அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஒருவேளை பாரிசானில் நீடித்தால் அது அதிகாரத்திற்காக போராட வேண்டும்; அதுவே பெரிக்காத்தானில் சேர்ந்தால், சமூகத்தின் ஆதரவு கிடைக்குமா என்ற நிச்சயமற்ற நிலையில் எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டியிருக்கும்.

இந்நிலையில், ம.இ.கா இளைஞர்களை சென்றடைய டிக்டோக், போட்காஸ்ட், சமூக ஊடகங்கள் போன்ற தளங்களைப் பயன்படுத்த வேண்டும்.

சமூக ஊடகப் பிரபலங்களுடன் இணைந்து, நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.

இனி, இந்தியர்களின் ஆதரவு விருந்து மேஜைகளில் கிடைக்காது; அது வாக்காளர்களின் கைகளில் — கைப்பேசி திரைகளில் — தான் உள்ளது என பெரியசாமி கூறுகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!