Latestமலேசியா

பினாங்குத் தமிழ்ப் பள்ளிகளுக்கு RM2.42 மில்லியன் நிதி; முதல்வர் வழங்கினார்

ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-9,-பினாங்கிலுள்ள தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக மாநில அரசாங்கம் மொத்தம் RM2.42 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடு, தமிழ்க் கல்வியை வலுப்படுத்தும் பினாங்கு அரசின் கடப்பாட்டைப் பிரதிபலிப்பதாக, ஆட்சிக் குழு உறுப்பினரும், மாநிலத் தமிழ்ப் பள்ளிகள் மீதான சிறப்பு செயற்குழுவின் தலைவருமான டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தராஜு தெரிவித்தார்.

இதில், RM768,000க்கும் மேற்பட்ட தொகை 28 தமிழ்ப் பள்ளிகளுக்கு, பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் வாயிலாக வழங்கப்பட்டு, கற்றல்ச் சூழலை மேம்படுத்த பயன்படும் என்றார் அவர்.

11 தமிழ்ப் பாலர் பள்ளிகளுக்கு RM194,000 ஒதுக்கப்பட்டுள்ளதுடன், RM1.3 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை கட்டமைப்பு மேம்பாடு, டிஜிட்டல் கற்றல் மற்றும் மாணவர் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.

இவ்வாண்டு, அனைத்து தமிழ்ப் பள்ளிகளுக்கும் இலவச மேசை, நாற்காலிகள் வழங்குதல், வழிபாட்டு அறைகள் அமைத்தல், மற்றும் மடிக்கணினி வழங்குதல் போன்ற புதிய முயற்சிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என சுந்தராஜு சொன்னார்.

தவிர, ஆசிரியர்களுக்கான மன அழுத்த நிர்வாக முகாம்கள், தேசிய மொழி பயிற்சி முகாம்கள், அறிவியல்-தொழில்நுட்பம்-பொறியியல்-கணிதம் ஆகியப் பாடங்களைக் குறிக்கும் STEM மற்றும் ரோபோட்டிக்ஸ் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்க் கல்வி ஒரு முக்கிய பண்பாட்டு மரபாகவும், எதிர்கால தலைமுறைக்கான கல்வி சொத்தாகவும் பாதுகாக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

முன்னதாக நிதி ஒப்படைக்கப்பட்ட நிகழ்வுக்கு, முதல்வர் Chow Kon Yeow தலைமைத் தாங்கினார்; துணை முதல்வர் ஜக்டீப் சிங் டியோ, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் உள்ளிட்டபிரமுகர்களும் அதில் கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!