Latestஅமெரிக்காஉலகம்

தேவைப்படும் இடங்களில் எல்லாம் தாக்குதல் நடத்துவோம்”: ஹிஸ்புல்லாவுக்கு நெத்தன்யாஹு நேரடி எச்சரிக்கை

ஜெருசலம், ஏப்ரல்-10-“தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் வடக்கு எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதிச் செய்யப்படும் வரை இந்த ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்றார் அவர்.

புதன்கிழமை லெபனானில் இஸ்ரேல் நடத்திய பெரிய வான்வழித் தாக்குதல்களில் ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

“இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது மிகத் துல்லியமாகவும் பலமாகவும் தாக்குதல் நடத்தப்படும்” என நெத்தன்யாஹு தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தெற்கு லெபனானில் தரைவழித் தாக்குதல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதை இஸ்ரேலிய இராணுவம் உறுதிச் செய்தது.

குறிப்பாக, ஈரான் ஆதரவுப் பெற்ற ஹிஸ்புல்லாவின் 10-க்கும் மேற்பட்ட ஆயுதக் கிடங்குகள் மற்றும் ஏவுகணைத் தளங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

அதேவேளையில், ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருவதால் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

புதன்கிழமைத் தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, 900 பேர் வரை காயமடைந்ததை அடுத்து, லெபனானிய அரசு நேற்று தேசிய துக்க தினத்தை அறிவித்தது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே இரண்டு வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் மட்டும் லெபனானைத் தொடர்ந்து தாக்குவது முக்கியத்துவம் பெறுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!