
கோலாலம்பூர், ஏப் 10- சில்லறை விற்பனைக் கடைகளுக்கு வரும் கணிசமான எண்ணிக்கையிலான குடியிருப்பாளர்கள், தள்ளுவண்டிகளைத் தங்களுடன் வீட்டிற்கு எடுத்துச் செல்வதால் அக்கடைகளின் உரிமையாளர்கள் லட்சக்கணக்கான ரிங்கிட் இழப்புக்கு உள்ளாகின்றனர்.
தங்களது நிறுவனத்தின் 76 விற்பனை நிலையங்களில் காணாமல் போன அல்லது திருடப்பட்ட ஷாப்பிங் தள்ளுவண்டிகளால் ஆண்டுக்கு சுமார் 500,000 ரிங்கிட் இழப்பு ஏற்படுகிறது என்றும், ஒவ்வொரு தள்ளுவண்டியின் விலையும் சுமார் 500 ரிங்கிட் என மைடின் பேரங்காடி நிர்வாக இயக்குநர் டத்தோ அமீர் அலி மைடின் தெரிவித்தார்.
காணாமல் போன பெரும்பாலான தள்ளுவண்டிகளைத் தனது கடைகளுக்கு அருகில் வசிக்கும் வாடிக்கையாளர்களே எடுத்துச் செல்வதாக அவர் கூறினார்.
அவர்கள் அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் அல்லது குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கிறார்கள்.
அவர்கள் தள்ளுவண்டிகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று, சாலையோரம் அல்லது பிற இடங்களில் வீசி விடுகின்றன. பழைய இரும்பு சேகரிப்பாளர்கள் இந்தத் தள்ளுவண்டிகளை எடுத்துச் சென்று அப்புறப்படுத்துகிறார்கள்.
இதனால் காணாமல் போன தள்ளுவண்டிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை மீண்டும் கடைகளுக்குத் திருப்பிக் கொண்டுவர, நிறுவனம் தொழிலாளர்களைப் பணியமர்த்த வேண்டியிருப்பதாக அமீர் அலி சுட்டிக்காட்டினார்.
சில நேரங்களில், வாடிக்கையாளர்கள் தள்ளுவண்டிகளை எங்கள் வளாகத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முடியாது என்று நாங்கள் கூறும்போது, அவர்கள் கோபமடைந்து, தாங்கள் மளிகைப் பொருட்களைச் சுமந்து செல்ல வேண்டியிருப்பதால் நாங்கள் அக்கறையின்றி நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.
இறுதியில், இந்த இழப்புகளுக்கான செலவு பயனீட்டாளர்கள் மீது சுமத்தப்படுகிறது என்று
அவர் குறிப்பிட்டார்.



