
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-13-பினாங்கு மாநில அரசு, முஸ்லீம் அல்லாத வழிபாட்டு இடங்கள், கல்லறைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு, நில வரி விகிதம் வெறும் 50 ரிங்கிட் மட்டுமே என நிர்ணயித்துள்ளது.
2026 நில வரி விகித திருத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பாக நில உரிமையாளர்களின் நிதிச்சுமையை குறைக்கும் நோக்கில், இம்முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் Chow Kon Yeow தெரிவித்தார்.
முன்பு சில இடங்களுக்கு இலட்சக்கணக்கில் வரி விதிக்கப்பட்டது.
உதாரணமாக, தீமோர் லாவோட் ஹொக்கியன் கல்லறைக்கு 735,682 ஆயிரம் ரிங்கிட் வரி விதிக்கப்பட்டிருந்தது.
இப்போது அது வெறும் 50 ரிங்கிட்டாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை சமூக அமைப்புகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
ஏற்கனவே அதிக வரி செலுத்தியவர்கள், மாவட்ட நில அலுவலகத்தில் விண்ணப்பித்து பணத்தைத் திரும்பப் பெறலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தற்போது, 1,204 முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள், மயானங்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகள் பினாங்கு நல்லிணக்கக் கழகத்தில் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் இதுவரை 58 அமைப்புகள் இந்த வரிச் சலுகைக்கு விண்ணப்பித்துள்ளன ; பல விண்ணப்பங்கள் ஏற்கனவே பரிசீலனையில் உள்ளதாகவும் முதல்வர் சொன்னார்.
இந்த முடிவு, பினாங்கின் மத, தொண்டு நிறுவனங்களுக்கு பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது.



