
கோலாலம்பூர், ஏப்ரல்-19 – மலேசியாவை 2030-ஆம் ஆண்டுக்குள் ஒரு ‘வாசிக்கும் நாடாக’ மாற்றும் இலக்கை நோக்கி, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு ஒரு பெரும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அவ்வகையில், நாட்டின் அறிவுசார் வளங்களை அனைத்து மக்களும் எளிதில் அணுகும் வகையில், லட்சக்கணக்கான நூல்களை அமைச்சு விரிவுபடுத்தியுள்ளது.
மலேசிய தேசிய நூலகமான PNM வாயிலாக, நாட்டு மக்களின் அறிவுத்திறனை மேம்படுத்த அமைச்சு உறுதிபூண்டுள்ளது.
அதற்காக தற்போது, தேசிய நூலகத்தில் 6 மில்லியனுக்கும் அதிகமான வாசிப்புப் பொருட்கள் பொது மக்களின் பயன்பாட்டுக்காகத் தயார் நிலையில் உள்ளன.
அவற்றில், 60,27,685 அச்சுப் பிரதி நூல்கள்,
நூலகப் பொருட்கள் ஒப்படைப்புச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட சுமார் 25 லட்சம் ஆவணங்கள்,
நாட்டின் அறிவுச் சொத்தாகக் கருதப்படும் 5,405 கையெழுத்துப் பிரதிகளும் அடங்கும்.
கால மாற்றத்தின் தேவையறிந்து, டிஜிட்டல் சேவைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக u-Pustaka இணையத்தளத்தின் வாயிலாக, 18 தரவுத்தளங்களைக் கொண்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட டிஜிட்டல் நூல்களைப் பொது மக்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தும் இலவசமாக வாசிக்க முடியும்.
இது குறித்துக் கருத்துரைத்த அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங், இம்முயற்சி வெறும் நூல்களைச் சேகரிப்பது மட்டுமல்லாமல், மக்களிடையே ஆழமான சிந்தனையையும், தகவலறிந்த சமூகத்தையும் உருவாக்குவதற்கான ஒரு களம் என்றும் வருணித்தார்.
அனைவருக்கும் சமமான மற்றும் உள்ளிடக்கியக் கல்வி அறிவை வழங்குவதில் மடானி அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இது காட்டுவதாக அவர் சொன்னார்.



