
ஷா ஆலாம், ஏப்ரல்-21-மத்தியக் கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் பொருட்களின் விலைவாசி உயர்வு 25 விழுக்காட்டை எட்டலாம் என, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி எச்சரித்துள்ளார்.
இந்த மோதல் நீடித்தால், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்படும்; இது மலேசியாவின் சுகாதாரப் பராமரிப்புச் சேவை, உணவு உத்தரவாதம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.
குறிப்பாக, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளதாக, இன்று சிலாங்கூர் சட்டமன்றத்தில் அனைத்துலக வங்கியொன்றின் ஆய்வை அவர் மேற்கோள்காட்டினார்.
இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, சிலாங்கூர் மாநில அரசு பொருளாதாரச் சவால்களைச் சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இப்போதே திட்டமிட்டு வருகிறது.
அவ்வகையில், மாநிலத்தின் கையிருப்பு மற்றும் விநியோக முறையை வலுப்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவும், மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து மாநில அரசு செயல்படும் என அவர் உறுதியளித்தார்.
அதே சமயம், தேவையற்ற பதற்றத்தில் பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என்றும் அமிருடின் பொது மக்களைக் கேட்டுக்கொண்டார்.



