
ஆயர் குரோ, ஏப்ரல்-21-மலாக்காவில் 8 மற்றும் 10 வயதுடைய இரு சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் ஆபாசப் படங்களை வைத்திருந்தது தொடர்பாக, 23 வயது இராணுவ வீரர் மீது இன்று ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
ஏப்ரல் 12-ஆம் தேதி சுங்கை ஊடாங், Kem Terendak முகாமில் உள்ள ஒரு காலி வீட்டில் அக்குற்றங்களைப் புரிந்ததாக, Muhammad Fudhail Fathollah Hamdan குற்றம் சாட்டப்பட்டார்.
சிறுமிகள் மீதான 2 பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டுகளும், 2017 சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டன; குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
இவ்வேளையில், தனது iPhone15 Pro Max கைப்பேசியில் ஏராளமான ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருந்ததாக, குற்றவியல் சட்டத்தின் கீழும் அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
எனினும், அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்து விசாரணை கோரினார்.
இதையடுத்து, 8,000 ரிங்கிட் மற்றும் ஒருநபர் உத்தரவாதத்தின் பேரில் நீதிபதி அவ்வாடவரை ஜாமீனில் விடுவித்தார்.
வழக்கு வரும் மே 26-ஆம் தேதி மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.



