
வாஷிங்டன், ஏப்ரல்-22-மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
மத்தியஸ்தராக செயல்படும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப்பின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
“ஈரான் அரசு தற்போது ‘பிளவுபட்டுள்ள’ நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கான ஒரு ஒருங்கிணைந்த திட்டத்தை ஈரான் தரப்பு முன்வைக்கும் வரை இந்த போர்நிறுத்தம் அமுலில் இருக்கும்” என ட்ரம்ப் வாஷிங்டனில் கூறினார்.
ஆனால், இது முழுமையான போர் நிறுத்தம் அல்ல…
ஈரானின் முக்கிய துறைமுகங்கள் மற்றும் Hormuz நீரிணையில் அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை தொடர்ந்து நீடிக்கும் என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானிய அதிகாரிகள் ஒரு முடிவுக்கு வரும் வரை அமெரிக்க இராணுவம் தாக்குதலுக்குத் தயார் நிலையிலேயே இருக்கும் என்றும் அவர் சொன்னார்.
முன்னதாக, இஸ்லாமாபாத்தில் செவ்வாய்க்கிழமைப் பேச்சுவார்த்தைத் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், துணையதிபர் ஜே.டி. வான்ஸின் (JD Vance) பாகிஸ்தான் பயணம் இரத்துச் செய்யப்பட்டு விட்டது.
இந்நிலையில், இந்த போர்நிறுத்தக் காலநீட்டிப்பு ஈரானுக்கு வழங்கப்பட்டுள்ள கடைசி வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.



