
கோலாலம்பூர், ஏப்ரல்-24-கம்யூனிஸ்ட் சித்தாத்தங்களைப் பரப்புவதாகக் கூறப்பட்ட 3 நூல்கள் மீதான தடையை நீக்க, உள்துறை அமைச்சு தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.
தடையை மீட்டுக் கொள்வதற்கான இறுதி கட்ட நடவடிக்கைக்கு, தேசிய சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்தின் பதிலுக்காக காத்திருப்பதாக, அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
முன்னாள் இடச்சாரி தலைவரான Shamsiah Fakeh-வின் சுயசரிதை, Aziz Suriani-யின் படைப்பு மற்றும் நவீன சீனாவின் சிற்பியாகப் போற்றப்படும் மா சே துங் (Mao Zedong) குறித்த ஆய்வுக் கட்டுரையின் மலாய் மொழிபெயர்ப்பு ஆகியவையே அந்த மூன்று நூல்களாகும்.
இந்த புத்தகங்கள் வரலாறு மற்றும் கல்வி சார்ந்தவை என்பதால், இவற்றுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
Shamsiah Fakeh-வின் சொந்தப் பேத்தியான பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் Jamaliah Jamaluddin-னும் அவர்களில் அடங்குவார்.
இந்நிலையில், எதிர்காலத்தில் புத்தகங்களைத் தடை செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
இனி பாதுகாப்பு அறிக்கைகளின் அடிப்படையில் நேரடியாகத் தடை விதிக்காமல், நடவடிக்கை எடுக்கும் முன் சம்பந்தப்பட்ட பதிப்பாளர்களிடம் விளக்கம் கேட்கப்படும் என சைஃபுடின் உறுதியளித்தார்.



