Latestமலேசியா

வேலைவாய்ப்பு இழப்பைக் குறைக்க புதிய நெருக்கடி கால ஆதரவுத் திட்டங்கள்; மனிதவள அமைச்சு அறிவிப்பு

கோலாலாம்பூர், ஏப்ரல்-26-நாட்டின் தொழிலாளர் சந்தையில் நிலவும் சவால்களை எதிர்கொள்ள ஏதுவாக, மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஒரு தொடர் ஆதரவுத் திட்டங்களை மனிதவள அமைச்சு அறிவிக்கவுள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் நாட்டில் சுமார் 5,900 பேர் வேலை இழந்துள்ளனர்.

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் பகுதிகளில் வசிப்பவர்களே இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கவலை தெரிவித்தார்.

எனவே, அரசாங்கத் தலையீட்டின் மூலம் வேலைத் தேடுவோரின் வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஆதரவுத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதில் வேலைக் காப்புறுதி முறைச் சட்டம் அல்லது ‘சட்டம் 800’மேம்படுத்தப்படும் என்று அவர் கூறினார் .

இதன் மூலம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்குத் தேவையான சமூகப் பாதுகாப்பு, மறுபயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கும் என அமைச்சர் உறுதிக் கூறியுள்ளார்.

மேலும், பட்டதாரி இளைஞர்களின் சவால்களைப் புரிந்துகொள்ளவும், அவர்களுக்குப் பொருத்தமான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவும் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு அமைச்சர் நேரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அதோடு, MYFutureJobs 2026 எனும் பிரிமீயம் வேலைவாய்ப்புக் கண்காட்சியும் நடத்தப்படுகிறது.

இவ்வாண்டு இந்த பிரீமியம் வேலைவாய்ப்புக் கண்காட்சியில் 799 பேர் வேலை பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அமைச்சர் முன்னதாக, KLCC-யில் நடைபெறும் MYFutureJobs விழாவுக்கு வருகைத் தந்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறியவர்கள், மே 1-ஆம் தேதி நடைபெறவுள்ள தொழிலாளர் தினக் கொண்டாட்டம் மற்றும் மே 9-ஆம் தேதி கோத்தா கினாபாலுவில் நடைபெறவுள்ள வேலைவாய்ப்புச் சந்தைகளில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.

தொழிலாளர் சந்தையை வலுப்படுத்தவும், நாட்டின் பொருளாதார சவால்களை முறியடிக்கவும் மனிதவள அமைச்சு எடுத்துள்ள இத்தகைய முன்னெடுப்புகள் குறித்த கூடுதல் விவரங்களை myfuturejobs.gov.my எனும் அதிகாரப்பூர்வ இணையத் தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!