
புத்ராஜெயா, ஏப்ரல்-27-2026 சிலாங்கூர் சுக்மா போட்டியைத் திட்டமிட்டபடி நடத்துவதற்கு மாநில சுல்தான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சுல்தானைச் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மத்தியக் கிழக்கு நெருக்கடி மற்றும் ஷா ஆலாம் விளையாட்டாரங்கக் கட்டுமானப் பணிகள் காரணமாக இப்போட்டியை ஒத்திவைக்க சுல்தான் ஷாராஃபுடின் பரிந்துரைத்திருந்தார்.
இருப்பினும், சிக்கனமான செலவுகள் மற்றும் கடுமையான நிதி நிர்வாகத்துடன் போட்டியை நடத்த இப்போது அவர் அனுமதி வழங்கியுள்ளதாக, இளைஞர் – விளையாட்டுத் துறை அமைச்சர் Dr. Taufiq Johari கூறினார்.
இந்நிலையில், இந்த வாரம் நடைபெறவுள்ள சிறப்பு உயர்மட்டக் கூட்டத்தில், செலவுகளைக் குறைப்பதற்கான விரிவான திட்டங்கள் குறித்து சிலாங்கூர் மாநில அரசுடன் ஆலோசிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்தாண்டு மலேசியா நடத்தவிருக்கும் சீ விளையாட்டுப் போட்டிகளுக்கு இளம் வீரர்களைத் தயார் செய்ய இந்த சுக்மா போட்டி மிக அவசியம் என Taufik குறிப்பிட்டார்.
சிலாங்கூர் சுக்மா வரும் ஆகஸ்ட் 15 முதல் 24 வரை நடைபெறும்.



