Latestமலேசியா

கிளந்தானில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்: 5.5 மீட்டர் ஆழக் கிணற்றுக்குள் விழுந்தும் இறைத்துதியால் மன உறுதிக் காப்பு

தும்பாட், ஏப்ரல்-27-கிளந்தான், வாக்காஃப் பாருவில் உள்ள சமயப்பள்ளி ஒன்றில், சுமார் 5.5 மீட்டர் ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்த 17 வயது மாணவர், ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.

நேற்று காலை சுமார் 8.30 மணியளவில், SMKA Falahiah பள்ளியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

பாதிக்கப்பட்ட மாணவர், 11 மணிக்குத் தேர்வில் அமருவதற்கு நண்பர்களுடன் காத்திருந்தார்.

அப்போது, நீண்ட நாட்களாகப் பயன்படுத்தப்படாத கிணற்றின் சிமெண்ட் மூடியின் மீது அமர்ந்திருந்தபோது, எதிர்பாராத விதமாக அது உடைந்து விழுந்ததில் அவர் கிணற்றுக்குள் தள்ளப்பட்டார்.

​சற்றே ஆழமுள்ள அந்தப் குறுகிய கிணற்றுக்குள், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கியிருந்த போதிலும், அம்மாணவர் சற்றும் பதற்றமடையாமல் சுமார் ஒரு மணி நேரம் இறைவனைத் துதிக்கும் Zikir செய்தபடி அமைதியாக இருந்தது அனைவரையும் நெகிழச் செய்தது.

​முதலில் அவரை மீட்க முயன்ற பள்ளியின் தோட்டக்காரருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

சுமார் 40 நிமிட போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் மாணவரைப் பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர்.

தலை மற்றும் உடலில் சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட அம்மாணவர், தற்போது ராஜா பெரம்புவான் சைனாப் II (HRPZ II) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது நிலைமை சீராக இருப்பதாக கிளந்தான் மாநில கல்வி இலாகா உறுதிப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!