Latestமலேசியா

வடகிழக்கு பருவமழை: மேற்கு கடற்கரையின் தாழ்வான பகுதிகளில் பேரிடர் அபாயம்

கோலாலம்பூர், அக்-27-தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையோரத் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே இன்று தொடங்கும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது. வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அதிகாரிகளின் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கவனிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கெடாவின் Yan, Kuala Muda, Pendang உள்ளிட்ட பகுதிகள், பினாங்கில் தாழ்வான பகுதி, சபாவின் Penampang பகுதிகளிலும் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கனமழை, உயரமான கடல் அலைகள் மற்றும் முறையாகப் பராமரிக்கப்படாத வடிகால் அமைப்புகள் ஒன்றிணையும்போது, ஆற்று நீர் கடலுக்குள் செல்வது தடைப்பட்டு குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடும் என மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் பேராசிரியர் Dr Mohd Ekhwan Toriman தெரிவித்தார்.

இவ்வேளையில், El Niño தாக்கத்தால் இப்பருவமழை வழக்கத்தைவிடத் தீவிரமாக இருக்க வாய்ப்பில்லை என்றாலும், மக்கள் அபாயங்களை அலட்சியப்படுத்தக்கூடாது என திரங்கானு மலேசியப் பல்கலைக்கழகத்தின் கடல் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் விரிவுரையாளர் Dr Chung Jing Xiang எச்சரித்துள்ளார். வடகிழக்குக் காற்றுகள் அதிக ஈரப்பதத்தைக் கொண்டு வருவதால், சாதகமான வானிலைச் சூழலில் கனமழையும் பெருவெள்ளமும் ஏற்படலாம். மேலும், குளிர் அலைகள் மற்றும் ‘Borneo vortex’ எனப்படும் குறைந்த காற்றழுத்த மண்டலமும் சில பகுதிகளில் கனமழையைத் தூண்டக்கூடும் என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, வடகிழக்கு பருவமழையின்போது கிளந்தான், பகாங், ஜோகூர் ஆகிய கிழக்குக் கடற்கரை மாநிலங்களும், சரவாக்கின் மேற்குப் பகுதிகளும் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) தலைமை இயக்குநர் Dr Mohd Hisham Mohd Anip கூறியுள்ளார். பருவமழை நிலவரத்தைக் கண்காணிக்க, செயல்பாட்டு அறை இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள மாநில அலுவலகங்கள் இந்தக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2026/2027 வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கி 2027 மார்ச் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!