
ஆராவ், ஏப்ரல்-29-பெர்லிஸ், ஆராவில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் பராமரிப்பில் இருந்த 8 மாத பெண் குழந்தை, பலத்த தலைக்காயம் காரணமாக உயிரிழந்துள்ளது.
ஏப்ரல் 23-ஆம் தேதி நடத்தப்பட்ட சவப் பரிசோதனையில், குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதும், அதன் விளைவாக மூளையில் உள் இரத்தக் கசிவு ஏற்பட்டதுமே மரணத்திற்குக் காரணம் என்றும் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக ஏப்ரல் 15-ஆம் தேதி குழந்தை மயக்க நிலையில் இருப்பதாக, பராமரிப்பாளர் குழந்தையின் தாய்க்குத் தகவல் கொடுத்துள்ளார்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, ஒரு வாரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் ஏப்ரல் 22-ஆம் தேதி உயிரிழந்தது.
ஏற்கனவே குழந்தையின் மூக்கு மற்றும் நெற்றியில் காயங்கள் இருந்ததை தாய் கவனித்துள்ளார்.
அப்போது பராமரிப்பாளரின் 6 வயது குழந்தை தவறுதலாகக் கீழே போட்டதால் அக்காயம் ஏற்பட்டதாம்.
எனினும், குழந்தைக்கு அப்போது ஒன்றும் ஆகாததால், தாய் மருத்துவனைக்குக் கூட்டிச் செல்லவில்லை.
இந்நிலையில் ஏப்ரல் 16-ஆம் தேதி விசாரணைக்காகக் கைதுச் செய்யப்பட்டு, பின்னர் ஜூன் 16 வரை போலீஸ் ஜாமீனில் பராமரிப்பாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், 2001 சிறார் சட்டத்தின் கீழ் அலட்சியம் மற்றும் சித்திரவதை பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



