
கோலாலாம்பூர், மே-4-சர்ச்சைக்குரிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா ஷரோன், தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் நிராகரித்துள்ளது.
கடந்தாண்டு ஜூன் மாதம், சிலாங்கூர், செலாயாங்கில் உள்ள ஒரு பேரங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில், ஒரு முதியவரை அவர் கடமை செய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
இது தொடர்பான வழக்கை இரத்து செய்யக் கோரி அவர் முன்வைத்த கோரிக்கையை AGC அதிகாரப்பூர்வமாக நிராகரித்துள்ளது.
முன்னதாக, குற்றத் தடுப்பு ரோந்து நடவடிக்கையின் போது போலீஸ் அதிகாரி Malvinderjit Singh Teerath Singh என்பவரை, கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி, கடந்த நவம்பர் மாதம் ஷீலா குற்றம் சாட்டப்பட்டார்.
எனினும் அவர் அதனை மறுத்து விசாரணைக் கோரியுள்ளார்.
இந்நிலையில், தனது கட்சிக்காரர் மீதான அக்குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும், வேறொருவரின் தவற்றை மறைக்க முயலும் முயற்சி என்றும் கூறி, ஷீலாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
உண்மையில் ஷீலா ஒரு சூழ்நிலைக் கைதி என்றும், குற்றமிழைத்தவர் அல்ல என்றும் அவர் வாதிட்டார்.
எனினும், தற்போது AGC ஷீலாவின் மனுவை நிராகரித்திருப்பதால், அவ்வழக்கின் விசாரணை வரும் டிசம்பர் 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் நடைபெறும்.



