
மூவார், மே-4-பிறருடைய வங்கி அட்டையைப் பயன்படுத்தி மதுபானம் வாங்கிய 39 வயது Ee Cha Seng என்ற நபருக்கு, ஜோகூர் மூவார் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் 12 மாத சிறைத்தண்டனை மற்றும் 2 பிரம்படிகள் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
ஏப்ரல் 27-ஆம் தேதி, ஜாலான் அலியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிகளில் 30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் தொலைந்து போன டெபிட் அட்டையைப் பயன்படுத்தி, அந்த நபர் 6 டின் மதுபானங்களை வாங்கியுள்ளார்.
இதற்காக அவர் RM30 மற்றும் RM63.90 என இரண்டு பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார்.
வங்கி அட்டையின் உரிமையாளர் தனது கைப்பேசி வங்கிச் செயலி மூலம் பணப் பரிவர்த்தனை அறிவிப்பைப் பெற்று அதிர்ச்சியடைந்தார்.
அவர் போலீஸ் நிலையம் செல்லும் வழியில், ஜாலான் பக்ரியில் உள்ள ஒரு துரித உணவு உணவகத்தில் மீண்டும் ஒரு பரிவர்த்தனை தோல்வியடைந்ததாக அறிவிப்பு வந்தது.
உடனடியாக அந்த இடத்திற்குச் சென்ற உரிமையாளர், சந்தேக நபரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார்.
இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 6 மாத சிறை மற்றும் ஒரு பிரம்படி என மொத்தம் 12 மாத சிறை மற்றும் 2 பிரம்படிகள் விதித்தார்.
அத்துடன் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் RM1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால் தலா 2 மாதங்கள் கூடுதல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவித்தார்.
ஆனால், அவ்வாடவர் அபராதத் தொகையைச் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.
அந்நபர் ஏற்கனவே 29 குற்றப் பின்னணிகளைக் கொண்டவர் என்பதும், போதைப்பொருள் தொடர்பான வழக்கிற்காக சிறை சென்று இரண்டு மாதங்களுக்கு முன்புதான் விடுதலையானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



