“ஜோசப் விஜய் எனும் நான்…” தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார் TVK தலைவர் விஜய்

சென்னை, மே-10,
தமிழக அரசியலின் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக TVK தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றுள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் சற்று முன்னர் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கார் விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வராக பதவி உறுதிமொழியைப் பார்த்துப் படிக்காமல் மனனம் செய்து பேசி அரங்கையே விஜய் அதிர வைத்தார்.
பதவியேற்பின் போது, அரங்கில் முன்வரிசையில் அமர்ந்திருந்த விஜயின் பெற்றோர் சந்திரசேகர் – உஷா தம்பதியர் மிகவும் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
முதல்வர் உறுதிமொழிக்குப் பிறகு இரகசியக் காப்பு பிரமாணமும் எடுத்துக் கொண்டு, பிரமாண பத்திரங்களில் அவர் கையெழுத்திட்டார்.
விஜயுடன் TVK பொதுச் செயலாளர் புஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
குறிப்பாக, எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையன் அமைச்சராகப் பதவியேற்கும் போது, விஜய் எழுந்து நின்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
பதவியேற்பு விழாவில், இந்திய நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு வருகைதந்து, விஜய் அருகிலேயே அமர்ந்திருந்தார்.
விஜய்க்கு பெரும்பான்மைக் கிடைக்க காங்கிரஸின் 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்திருப்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பதவியேற்பு விழாவுக்கு முழு போலீஸ் பாதுகாப்புடன் விஜய் சென்னை சாலைகளை வலம் வந்த போது, இரு மருங்கிலுமம் தொண்டர்களும் பொது மக்களும் உற்சாக வரவேற்பு வழங்கினர்.
பதவியேற்பு விழாவில் பிரபல நடிகை திரிஷா முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.
ஒருவழியாக தமிழகத்தின் முதல்வராக விஜய் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், அவரின் முதல் கையெழுத்தும் உத்தரவும் எதுவாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு தற்போது மேலோங்கியுள்ளது.
அரை நூற்றாண்டுக்கும் மேல் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வந்த திராவிட கட்சிகளின் ஆதிகத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து, ‘தளபதி’ விஜய் ‘முதல்வர்’ விஜயாக இன்று புதிய அத்தியாயம் தொடங்குகிறது.



