கோலாலம்பூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் 133-வது திருவிழா: கோபிந்த் சிங் பங்கேற்பு

கோலாலம்பூர், மே-10,
கோலாலாம்பூர், ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் அமைந்துள்ள அருள்மிகு தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் 133-வது ஆண்டு திருவிழா இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.
காலை 11.00 மணியளவில் தொடங்கிய விழாவில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.
திருவிழாவானது பால்குட ஊர்வலம் மற்றும் கும்பப் புறப்பாட்டுடன் பக்தி மயமாகத் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து விசேஷ பூஜைகளும், மகேஸ்வர பூஜையும் நடைபெற்றன.
இலக்கியவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தனது மனைவியுடன் வருகை தந்து விழாவைச் சிறப்பித்தார்.
ஆலயத்தின் சார்பில் அமைச்சருக்குப் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்துச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆலயத் தலைவர் Dr பார்திபன் கண்மணி திருவிழா குறித்தும், புதிய ஆலயக் கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் விளக்கமளித்தார்.
விழாவுக்குப் பின்னர், புதிய ஆலயக் கட்டுமான இடத்திற்கு அமைச்சர் கோபிந்த் சிங் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தற்போதைய கட்டுமான முன்னேற்றங்கள் குறித்து ஆலயத் தலைவரிடம் அவர் கேட்டறிந்தார்.
இந்த ஆலயத்தின் நிலப் பதிவு மற்றும் கட்டுமானப் பிரச்னைகள் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ஆலயக் கட்டுமானம் முழுமையடையும் வரை எனது முழு ஆதரவு தொடரும் என்றும் கோபிந்த் சொன்னார்.
பங்கேற்ற பக்தர்களில் வர்மா வைத்தி லிங்கம் மற்றும் ரமணன் பட்டாபிராமன் ஆகியோர், இவ்வாண்டு திருவிழா தங்களுக்கு மிகுந்த மன நிறைவையும் ஆன்மிக உணர்வையும் தந்ததாகத் தெரிவித்தனர்.
இதனிடையே இன்று அன்னையர் தினம் என்பதால், ஆலயத்திற்கு வந்திருந்த சில மூத்த அன்னையர்களுக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
அமைச்சர் மற்றும் ஆலயப் பொறுப்பாளர்களுடன் இணைந்து அன்னையர்கள் அனைவரும் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.



