
ஜோகூர் பாரு, மே 11 – JPJ அதாவது சாலை போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தியுள்ள MyLesen B2 Sekolah (MyB2S) திட்டத்தின் மூலம், இந்த ஆண்டு 60,000 மாணவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உரிமம் பெறுவார்கள் என போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்திற்காக அரசாங்கம் 18.5 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திட்டத்தை மலேசிய இந்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மலேசிய இந்திய சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, உரிமம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டும் மாணவர்களுக்கு சட்டபூர்வமாக ஓட்டுநர் உரிமம் பெற இந்தத் திட்டம் உதவும் என்று அந்தோனி லோக் கூறினார்.
ஜோகூரில் மட்டும் 8,200 மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சாலை விபத்தில் உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்றும், அவர்களில் பலர் 30 வயதிற்குட்பட்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.



