அலோர் ஸ்டாரில் பரபரப்பு: கடத்த முயன்ற நபரின் கையை கடித்து தப்பிய 14 வயது சிறுமி

அலோர் ஸ்டார், மே-16,
கெடாவில் 14 வயது பள்ளி மாணவி, மர்ம நபர் ஒருவரின் கடத்தல் முயற்சியில் இருந்து தனது துணிச்சலான தற்காப்பு நடவடிக்கையால் தப்பியுள்ளார்.
அலோர் ஸ்டார், பெக்கான் சிம்பாங் குவாலாவில் வியாழன் இரவு 8.25 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இரண்டாம் படிவம் பயிலும் அச்சிறுமி ஒரு பாதையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென சிறுமியை வழிமறித்து அவரது முகத்தைப் பொத்தி கடத்த முயன்றுள்ளார்.
இருப்பினும், சற்றும் பதற்றமடையாத அச்சிறுமி, கடத்தல்காரனின் கையை பலமாகக் கடித்தார்.
இதனால் ஏற்பட்ட வலியில் அந்த நபர் பிடியை விடவே, சிறுமி அங்கிருந்து தப்பி ஓடி அருகில் இருந்த ஒரு டியூஷன் மையத்தில் தஞ்சமடைந்தார்.
இச்சம்பவம் குறித்து கோத்தா ஸ்டார் போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திலிருந்து மாதிரிகளைச் சேகரித்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மோட்டார் சைக்கிளோட்டியைப் பிடிக்க போலீஸார் வலைவீசியுள்ளனர்.



