Latestமலேசியா

பினாங்கு இந்து அறப்பணி வாரியம் சார்பில் 146 சிறந்த SPM இந்திய மாணவர்களுக்குப் பாராட்டு விழா

ஜோர்ஜ்டவுன், மே-17-2025 SPM தேர்வில் மிகச் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற 146 இந்திய மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில், பினாங்கு இந்து அறப்பணி வாரியம் நேற்று சிறப்புப் பாராட்டு விழாவை நடத்தியது.

இவ்விழாவில், SPM தேர்வில் 10A+ பெற்று சாதனைப் படைத்த புக்கிட் ஜாம்புல் தேசிய இடைநிலைப் பள்ளியின் மாணவர் சஞ்சய் முனியாண்டிக்குச் சிறப்பு அங்கீகாரம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவில் உரையாற்றிய அறப்பணி வாரியத்தின் தலைவர் RSN ராயர், பினாங்கில் உதவித் தேவைப்படும் இந்துச் சமூகத்திற்கு உதவ பிரத்யேகமாக இத்தகைய வாரியத்தைக் கொண்ட ஒரே மாநிலம் பினாங்கு மட்டுமே என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தவிர, துணைத் தலைவர் Dr லிங்கேஸ்வரன் ஆர். அருணாசலம் தலைமையிலான கல்வி மற்றும் நலனுதவிப் குழுவின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் பினாங்கு முழுவதும் 1,712 இந்துக்களின் கல்வி மற்றும் நலனுக்காக மொத்தம் 1.29 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது என்றும், ராயர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்த பினாங்கு முதல்வர் சாவ் கோன் இயோ, சாதனைப் படைத்த இந்திய மாணவர்களின் வெற்றி, அவர்களின் குடும்பத்திற்கும் மாநிலத்தின் கல்வி வளர்ச்சிக்கும் பெருமை சேர்த்துள்ளதாகப் பாராட்டினார்.

பினாங்கின் இளம் திறமையாளர்கள் எதிர்காலத்தில் தங்களின் உயர்கல்வியை முடித்துவிட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்குத் பங்களிக்க மீண்டும் திரும்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தராஜூ, பினாங்கு ம.இ.கா தலைவர் டத்தோ ஜெ. தினகரன் உள்ளிட்ட பிரமுகர்களும் பெற்றோர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!