Latestஇந்தியாஉலகம்

தாயகம் திரும்பிய சோழர் காலப் பொக்கிஷம்: 1,000 ஆண்டுகள் பழமையான செப்பேடுகளை இந்தியாவிடம் ஒப்படைத்த நெதர்லாந்து

ஆம்ஸ்டர்டாம், மே-17-இந்தியாவின் கலாச்சார மரபுக்கு கிடைத்துள்ள ஒரு மிகப்பெரிய வெற்றியாக, ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து செப்பேடுகள் அல்லது செப்புப்பட்டயங்களை நெதர்லாந்து இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

அந்த ஐரோப்பிய நாட்டுக்கு வருகை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், இவை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

​பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த அரிய செப்புப்பட்டயங்கள், சோழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க அரச ஆணைகளையும், கோயில்களுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடைகளையும் விவரிக்கின்றன.

இந்தியாவுக்கு வெளியே பாதுகாக்கப்படும் மிக முக்கியமான தமிழ் பாரம்பரியச் சான்றுகளாக இவை போற்றப்படுகின்றன.

இந்தச் சோழர் காலத்துச் செப்புப் பட்டயங்கள் மொத்தம் 21 பெரிய செப்புத் தகடுகளையும், 3 சிறிய செப்புத் தகடுகளையும் உள்ளடக்கியுள்ளன.

இந்தச் செப்பேடுகளில் உள்ள கல்வெட்டு எழுத்துகள் பெரும்பாலும் தூய தமிழ் மொழியிலேயே பொறிக்கப்பட்டுள்ளன.

இது ஒவ்வொரு இந்தியருக்கும், குறிப்பாகத் தமிழர்களுக்கும் ஒரு பெருமிதமான தருணம் என பிரதமர் மோடி தனது X தளத்தில் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.

​பண்டைய தென்னிந்தியாவின் நிர்வாகம், பொருளாதாரம் மற்றும் கலாச்சார வாழ்க்கையைப் புரிந்துகொள்ள இந்த சோழர் காலத்து செப்புப்பட்டயங்கள் விலைமதிப்பற்றவை என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பல தசாப்தங்களுக்கு முன்பு, கலாச்சார பாரம்பரியச் சட்டங்களை மீறி இவை இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

​கலாச்சார சொத்துக் கடத்தலுக்கு எதிரான கூட்டு முயற்சிக்கும், இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக ஒத்துழைப்பிற்கும் இந்த நிகழ்வு ஒரு முக்கிய மைல்கல் என்று இரு நாட்டு தலைவர்களும் பாராட்டியுள்ளனர்.

​விலைமதிப்பற்ற இந்த வரலாற்றுச் சின்னங்கள், விரைவில் இந்தியாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு, ஆய்வாளர்களின் பயன்பாட்டுக்காகப் பாதுகாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!