Latestமலேசியா

லாபு 4 தமிழ்ப்பள்ளியின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளம்: MVV திட்டத்தில் 6 ஏக்கர் நிலத்தை வழங்கியது நெகிரி அரசு – அருள் குமார்

லாபு, மே-18-நெகிரி செம்பிலான், லாபு 4 தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடக் கட்டுமானத்திற்காக, ‘Malaysian Vision Valle’ (MVV) நவீனப் பட்டண மேம்பாட்டுத் திட்டத்தில் 6 ஏக்கர் நிலத்திற்கான உரிமத்தை மாநில அரசாங்கம் பள்ளி மேலாளர் வாரியக் குழுவுக்கு (LPS) அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது.

ஏறக்குறைய 2,382 ஏக்கர் நிலப்பரப்பில் Matrix Concepts நிறுவனத்தால் தற்பொழுது மண் வேலைகளுடன் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தில், பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட முதல் நிலம் இந்த தமிழ்ப்பள்ளிக்குரியதுதான் என, மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் ஜம்புநாதன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பள்ளி வளாகத்திலிருந்து வெறும் 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நிலத்திற்காக, கடந்த பிப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் வெறும் 3 மாதங்களுக்குள் மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

எதிர்காலத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்படவிருக்கும் இப்பகுதியில், கணிசமான எண்ணிக்கையில் இந்தியக் குடும்பங்கள் குடியேறவிருக்கின்றனர்.

புதிய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசாங்கம் இறுதி அனுமதி வழங்குவதற்கு முன்பே, தமிழ்ப்பள்ளிகளுக்கான நிலத்தை முன்கூட்டியே உறுதிச் செய்ய வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனைக்கு இந்த நகர்வு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், இந்த பிரம்மாண்ட MVV நவீனப் பட்டணத்தில் அமையவிருக்கும் முதல் முக்கியக் கட்டடமாக லாபு 4 தமிழ்ப்பள்ளிதான் திகழும் என்றும் அருள் குமார் நம்பிக்கை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!