
பெங்களூரு, மே-19-தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாமில் 2 யானைகள் நேற்று திடீரென மோதிக் கொண்டதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 வயது பெண் சுற்றுப் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையைச் சேர்ந்த Jinsu என்ற அந்தப் பெண், காவேரி ஆற்றங்கரையில் யானைகளுக்குக் குளியல் போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, கஞ்சன் மற்றும் மார்த்தாண்டா ஆகிய இரு வளர்ப்பு யானைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
பாகன்கள் எவ்வளவோ முயன்றும் யானைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
கஞ்சன் யானை வேகமாக முட்டித் தள்ளியதில், நிலைதடுமாறிய மார்த்தாண்டா யானை கீழே விழுந்தது.
எதிர்பாராதவிதமாக, கீழே விழுந்த யானையின் அடியில் Jinsu மாட்டிக்கொண்டார்.
இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
பக்கத்திலுருந்த அவரின் 31 வயது கணவர் Joel மற்றும் 5 வயது மகள் Jercey சட்டென விலகியதால், உயிர் தப்பினர்.
வைரலான வீடியோவில், மோதிக் கொள்ளும் யானைகளுக்கு நடுவில் உயிரற்ற உடலாய் கிடந்த மனைவியை, இடுப்பில் மகளை வைத்துக் கொண்டு Joel பிடித்து இழுக்கும் காட்சி நெஞ்சை பதற வைக்கிறது.
இந்தத் துயரச் சம்பவத்திற்கு கர்நாடக அரசு ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
Jinsu-வின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் உடனடி இழப்பீட்டுத் தொகையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வனத்துறை இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதோடு, சுற்றுப் பயணிகள் யானைகளுடன் நெருக்கமாகப் பழகும் இந்த முகாமில், பாதுகாப்பு விதிமுறைகளை மறுஆய்வு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.



