
புத்ராஜெயா, மே-19-சமூக ஊடகங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதற்காக Nur Irsalina Omar Kumar என்ற பெண்ணுக்கு செப்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் RM4,000 அபராதம் விதித்துள்ளது.
அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
கடந்த மார்ச் 31-ஆம் தேதி அவர் தனது Threads சமூக ஊடகக் கணக்கில் அதிகாரப்பூர்வ Buletin TV3 ஊடகச் செய்தி போல திருத்தப்பட்ட படம் ஒன்றை பதிவேற்றினார்.
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப் போவதாக அந்தப் போலிப் படம் காட்டியது.
இது பொது மக்களை தவறாக வழிநடத்தியதுடன், வாழ்க்கைச் செலவினங்கள் குறித்த கவலையையும் ஏற்படுத்தியதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் MCMC தெரிவித்தது.
இந்நிலையில் 1998 ஆம் ஆண்டு MCMC சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இக்குற்றத்திற்கு RM500,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
RM4,000 அபராதத்தை செலுத்தத் தவறினால், 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் அந்த அபராதத் தொகையைச் செலுத்தினார்.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, பொது நலன் சார்ந்த விஷயங்களில் பொய்ச் செய்திகளைப் பரப்புவது சமூகத்தின் நிலைத்தன்மையைப் பாதிக்கும் என MCMC பொது மக்களுக்கு நினைவூட்டியுள்ளது.
மேலும், எந்தவொரு தகவலையும் பகிரும் முன் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் பயனர்களை அது கேட்டுக் கொண்டுள்ளது.



