
சிரம்பான், கம்போங் பாசீரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஓம் சிவனாலயம்’ அருள்மிகு விசாலாட்சி அம்பிகா சமேத அருள்மிகு காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோவிலின் நான்காவது மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று காலை பக்திப் பரவசத்துடன் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
சுமார் 3 ஆண்டுகாலத் திருப்பணிகளுக்குப் பின் நடைபெற்ற இவ்விழாவில், நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அருள் குமார் Jambunathan, ராசா நாடாளுமன்ற உறுப்பினர் Cha Kee Chin, மலேசிய இந்து சங்கத்தின் Negeri Sembilan மாநிலத் துணைத் தலைவர் முருகையா உட்பட 6,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
அதிகாலையில் நான்காம் கால யாக பூஜை மற்றும் கடம் புறப்பாட்டைத் தொடர்ந்து, காலை ஏழு மணி பதினெட்டு நிமிடத்திற்கு ரிஷப லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது.
தொடர்ந்து மகா அபிஷேகம், சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் மற்றும் பிரசாத விநியோகங்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.
பின்னர் கோவிலின் சிறப்பைப் புகழ்ந்த அருள் குமார், சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் சாத்தியமாகியுள்ளது குறித்து மனநிறைவுத் தெரிவித்தார்.
இதனிடையே வாஆலயப் புதுப்பிப்புக்கு 30,000 ரிங்கிட் வழங்கிய ராசா நாடாளுமன்ற உறுப்பினர் Cha Kee Chin, CCTV கேமராக்கள் பொருத்த மேலும் 9,000 ரிங்கிட் வரை நிதியுதவி வழங்குவதாக உறுதியளித்தார்.
பெருமளவில் பக்தர்கள் திரண்டது பக்திமயமாக இருந்ததாக Rembau நகராண்மைக் கழக உறுப்பினர் மோகன் முனுசாமி நெகிழ்ச்சித் தெரிவித்தார்.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகும் கடின உழைப்பின் பலனாகவும் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது குறித்து ஆலயத்தின் செயலாளரும், நிறுவனரும், அறங்காவலருமான கணேசன் ஆறுமுகம் ஆத்ம திருப்தியுடன் கூறினார்.
இவ்வேளையில், கும்பாபிஷேகம் குறித்து விவரித்த பஹாவ் முத்து மாரியம்மன் ஆலயத்தின் தலைமை குருக்கள் சிவ ஸ்ரீ பட்டுரமணி சிவாச்சாரியார், சுற்று வட்டார பக்தர்கள் நன்முறையில் வந்து வழிபாடு செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
கும்பாபிஷேகத்தை நேரில் கண்டவர்கள் சிலர் சந்தோஷத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.
இவ்வாலயம், நமது சமய பாரம்பரியத்தையும் ஆன்மிகப் பண்பாட்டையும் தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் முக்கிய ஆன்மிக மையமாகத் திகழ்கிறது. பல்வேறு சவால்கள் மற்றும் நீண்டகால திருப்பணிகளுக்குப் பின்னர் நடைபெற்ற இந்த மகா கும்பாபிஷேகம், பக்தர்களின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் இறைநம்பிக்கையின் வெளிப்பாடாக அமைந்திருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட இவ்விழா, சிரம்பான் பகுதியின் ஆன்மிக வரலாற்றில் மறக்கமுடியாத நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.



