
கோலாலம்பூர், ஜூன்-1 – எதிர்கட்சிக் கூட்டணியை பாஸ் கட்சி மட்டுமே தன் வசம் ஆதிக்கத்தில் வைத்துள்ளதைப் போல நடந்துகொள்ளக் கூடாது என ‘உரிமை’ இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் Dr பி. ராமசாமி சாடியுள்ளார்.
பெரிக்காத்தானுக்கு வெளியே உள்ள எதிர்கட்சிகளை இணைக்கும் அதிகாரப்பூர்வமற்ற இக்கத்தான் பெர்பாடுவான் ரக்யாட் (IPR) கூட்டணியில் உள்ள உரிமை மற்றும் MAP ஆகிய கட்சிகள், பெரிக்காத்தான் நேஷனல் (PN) சின்னத்தில் போட்டியிடலாம் என தான் ஸ்ரீ முஹிடின் யாசின் கூறியிருந்த நிலையில், தற்போது பாஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
முஹிடின் யாசினின் தலைமையை வலுப்படுத்துவதைக் கண்டு பாஸ் அஞ்சுகிறதா அல்லது பெர்சாத்து கட்சியை ஓரங்கட்டப் பார்க்கிறதா என்றும் இராமசாமி வினவியுள்ளார்.
பாஸ் சில மாநிலங்களில் மலாய் வாக்குகளைப் பெற்றிருந்தாலும், அதற்கு மலாய்க்காரர் அல்லாதோரின் ஆதரவு இல்லை; ஆனால் பெர்சாத்து கட்சிக்கு இரு தரப்பு ஆதரவும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
PN கூட்டணியில் இணைய உரிமை இயக்கம் ஒருபோதும் அவசரப்படவில்லை என்று கூறிய ராமசாமி, வரும் தேர்தலில் பெர்சாத்து கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்தால், IPR கட்டமைப்புக்குள் அதற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
பெரிக்காத்தானில் பாஸ் – பெர்சாத்து இடையே விரிசல் உச்சக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், மலாக்கா தேர்தல் குறித்து முஹிடின் வெளியிட்ட கருத்து நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
முஹிடின் பெரிக்காத்தானுக்கு தற்போதைக்குத் தலைவர் இல்லை என்றும், அக்கூட்டணி சார்பில் கருத்துக் கூற அவருக்கு உரிமையில்லை என்றும் பாஸ் கட்சித் தலைவர்கள் காரசாரமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.



