
கோலாலம்பூர், ஜூன்-9-மலேசிய அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பாக, பெர்சாத்து கட்சியுடனான தனது அரசியல் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக முறித்துக் கொள்வதாக பாஸ் கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.
கோலாலம்பூரில் உள்ள பாஸ் கட்சியின் தலைமையகத்தில் நேற்றிரவு நடைபெற்ற அக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு, அதன் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் இந்த முடிவை வெளியிட்டார்.
பெர்சாத்து கட்சியின் தன்னிச்சையான செயல்பாடுகள், தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் அண்மைய மாநில அரசியல் நெருக்கடிகள் காரணமாக இரு கட்சிகளுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கூட்டணியில் கடுமையான விரிசல் நிலவி வந்தது.
இந்த நிலையில், 16-ஆவது பொதுத் தேர்தலை நோக்கிய தனது புதிய அரசியல் பயணத்தை பாஸ் கட்சி தனியாகவோ அல்லது புதிய கூட்டணிகளுடனோ எதிர்கொள்ளத் தயாராகி வருவதாக, அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பெரிக்காத்தான் கூட்டணியில் இரு கட்சிகளின் நிலைமை குறித்து எதுவும் தெரிவிக்கப்படாததால், பாஸ் அதிலிருந்து வெளியேறுமா அல்லது பெர்சாத்துவை வெளியேற்றி விடுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இன்று பெர்சாத்து அதன் பதிலறிக்கையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எது எப்படியோ, பெரிக்காத்தான் கூட்டணியின் இரு முக்கியத் தூண்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த பிளவு, நாட்டின் அரசியல் அரங்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



