
வாஷிங்டன், ஜூன்-18-மத்தியக் கிழக்கில் நீடித்து வந்த போரை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், ஈரான் உடனான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் திடீரெனக் கையெழுத்திட்டுள்ளார்.
பிரான்ஸின் வெர்சாய்ஸ் அரண்மனையில், பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மெக்ரோன் உடனான இரவு விருந்தின் போது இந்த அதிரடி கையெழுத்து நடவடிக்கை நிகழ்ந்ததை அமெரிக்க ஊடகங்களும் ஈரானிய வெளியுறவு அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளன.
முதலில் சுவிட்சர்லாந்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த அதிகாரப்பூர்வ நிகழ்வுக்கு முன்னதாகவே இத்திருப்பம் ஏற்பட்டுள்ள போதிலும், திட்டமிட்டபடி ஜெனிவா சந்திப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், கடந்த பிப்ரவரி 28 முதல் சுமார் 110 நாட்களாக நீடித்து வந்த அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் ஒரு முடிவுக்கு வருகிறது.
‘இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த 14 அம்ச இடைக்கால உடன்படிக்கையின் முழு விவரங்களை அமெரிக்க அதிகாரிகள் தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்படும்.
மேலும், 30 நாட்களுக்குள் ஈரான் மீதான கடல்சார் முற்றுகையை அமெரிக்கா அகற்றும் வேளையில், Hormuz நீரிணை வழியாக வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்கு ஈரான் கட்டணமின்றி அனுமதி வழங்கும்.
மிக முக்கியமாக, ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என ஒப்புக்கொண்டுள்ளதுடன், அதன் அணுசக்திப் பொருட்கள் அனைத்தும் அனைத்துலக அணுசக்தி நிறுவனமான IAEA மேற்பார்வையில் அழிக்கப்படும்.
இதற்குப் பிரதிபலனாக, ஈரானின் பொருளாதார மறுசீரமைப்புக்காக அமெரிக்கா மற்றும் வட்டார பங்காளிகள் இணைந்து 300 பில்லியன் டாலர் நிதியத்தை உருவாக்கவுள்ளன.
அதோடு ஈரான் மீதான அனைத்து பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா நீக்கவுள்ளது.
தற்பொழுது ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், இறுதி உடன்படிக்கையை முழுமையாக எட்டுவதற்கு இரு நாடுகளுக்கும் 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



