
ஷா ஆலாம், ஜூலை-1-சிலாங்கூர், ஷா ஆலாலமில் கடந்த ஜூன் 23-ஆம் தேதி முதல் காணாமல் போன 14 வயது சிறுவனைத் தேடும் பணியைப் போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அச்சிறுவன் தனது தாயாருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளான்.
ஷா ஆலாம், செக்ஷன் 16-ல் உள்ள ரிம்பா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த Muhammad Shazriq Ziqri Abdullah, ஜூன் 23-ஆம் தேதி காலை மணி 6.45-க்கு கடைசியாக தனது வீட்டில் காணப்பட்டுள்ளான்.
தாயாருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அச்சிறுவன் வீட்டை விட்டு வெளியேறியதாக நம்பப்படுகிறது.
தான் புறப்படும் முன் எழுதிய கடிதத்தில், _”உங்களைக் காப்பாற்றும் தகுதி எனக்கு வரும்போது நான் மீண்டும் வருவேன்”_ என அவன் குறிப்பிட்டுள்ளான்.
அதோடு, அன்பு காரணமாகவே வீட்டை விட்டுச் செல்வதாகவும், மனம் வெறுத்து அல்ல என்றும் அப்பையன் கடிதத்தில் எழுதியுள்ளான்.
இது குறித்து ஜூன் 24-ஆம் தேதி புகார் பெறப்பட்டதை உறுதிப்படுத்திய ஷா ஆலாம் மாவட்டப் போலீஸ் தலைவர் ACP Sarudin Samah, போலீஸார் சிறுவனின் நண்பர்கள் வட்டாரத்திலும் அவன் வழக்கமாகச் செல்லும் இடங்களிலும் தேடி வருவதாகக் கூறினார்.
பொது மக்கள் அச்சிறுவனைப் பற்றிய ஏதேனும் விவரங்கள் அறிந்திருந்தால், உடனடியாக ஷா ஆலம் மாவட்டப் போலீஸ் தலைமையகத்தையோ அல்லது விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமட் ராசி சஹாரியை (Inspector Mohd Razi Sahari) 019-571 7076 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



