Latestமலேசியா

e-wallet நிறுவனங்கள் மோசடிகளுக்கு ஆளாகுவோருக்கு 7 வேலை நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் – பிரதமர்

அலட்சியமாகச் செயல்படும் இ-வாலட் (e-wallet) நிறுவனங்கள், மோசடிகளுக்கு ஆளாகி பாதிக்கப்படுவோருக்கு ஏழு வேலை நாட்களுக்குள் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இ-வாலட் சேவை வழங்கும் நிறுவனங்கள், மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாரா பரிந்துரைத்துள்ள தடுப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தவறும் பட்சத்தில் அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று அவ்வாறு செய்ய வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

பயனர்களின் கவனக்குறைவால் இழப்பு ஏற்பட்டிருந்தாலும் கூட, இந்த விதிமுறை பொருந்தும் என்றாரவர்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தனியார் துறைகள் ஆகியவற்றுடன் இணைந்து பேங்க் நெகாரா பல்வேறு தளங்கள் மூலம் தொடர்ச்சியான பொது விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிதி மோசடிகளுக்கு எதிரான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதையும் அன்வார் சுட்டிக் காட்டினார்.

ஒட்டுமொத்தத்தில் இந்நடவடிக்கைகள் பயனீட்டாளர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பணம் செலுத்தும் சேவை வழங்குநர்களின் பொறுப்புணர்வை மேம்படுத்தவும், நாட்டில் இலக்கவியல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பு மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கவும் அரசாங்கம் மற்றும் பேங்க் நெகாரா கொண்டுள்ள கடப்பாட்டைக் காட்டுவதாக நிதியமைச்சருமான அன்வார் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வமான பதிலில் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!