பெங்களூரில் குழந்தைகளை துணி துவைக்கும் எந்திரத்திற்குள் திணித்து சித்ரவதை: 5 பராமரிப்பாளர்கள் மீது வழக்கு

பெங்களூர், ஜூலை 2 – பெங்களூரிலுள்ள குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்றில், 2 முதல் 3 வயதுடைய குழந்தைகளைக் கொடூரமாக துன்புறுத்திய குற்றத்திற்காக 5 பராமரிப்பாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குழந்தைகளை முன்புறம் திறக்கும் துணி துவைக்கும் எந்திரத்திற்குள் அமர வைத்ததுடன், அவர்கள் அழும்போது கழிப்பறையில் பூட்டி வைத்து, ‘ஜெட் ஸ்ப்ரே’ மூலம் வாயில் தண்ணீர் பீய்ச்சியும் தண்டித்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசாரும் கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் விசாரணையைத் தொடங்கியுள்ளன.
இந்தச் சம்பவம் பெற்றோர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், நிறுவன வளாகங்களில் இயங்கும் குழந்தைகள் பராமரிப்பு மையங்களின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.



