
புத்ராஜெயா, ஜூலை-5-பரிந்துரை கடிதங்கள் அடிப்படையில் கடன்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என, பூமிபுத்ரா நிறுவனங்களுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக இத்தகைய பரிந்துரை கடிதங்கள் மூலம் கடன் வழங்கும் கலாச்சாரம் வேரூன்றியுள்ளதாக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுட்டிக் காட்டினார்.
இது ஒரு வகையான முறைகேடு என்றும், இதன் காரணமாக பல கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாமல் நிறுவனங்கள் வீழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொழில் தொடங்குவதற்காக வழங்கப்படும் நிதியை, சிலர் ஆடம்பர கார்கள் வாங்கவும், பகட்டான அலுவலகங்களை அமைக்கவும் பயன்படுத்துவதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
பூமிபுத்ரா பொருளாதார மேம்பாடு மிகுந்த வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையுடனும் கையாளப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அன்வார், விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இவ்வேளையில், புதிய பூமிபுத்ரா நிறுவனங்களை உருவாக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்றும், தற்போதுள்ள PUNB, MARA, Tekun, SME Corp போன்றவற்றை வலுப்படுத்தவும், அவற்றுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
பூமிபுத்ரா திட்டங்களை பூமிபுத்ரா நிறுவனங்கள் மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்ற கருத்து காலாவதியானது என்றும், அனைத்து அரசு துறைகளும், அமைச்சுகளும் இதில் பங்காற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.



