
கோலாலம்பூர், ஜூலை-6-இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை, நாட்டில் பச்சிளம் குழந்தைகள் கைவிடப்பட்டது தொடர்பில் 18 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிலாங்கூரில் மிக அதிகமாக 10 சம்பவங்களும், சபா மற்றும் பினாங்கில் தலா இரண்டு சம்பவங்களும், ஜோகூர், நெகிரி செம்பிலான், பேராக் மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் தலா ஒரு சம்பவமும் கண்டறியப்பட்டுள்ளதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணையமைச்சர் Lim Hui Ying தெரிவித்தார்.
கடந்தாண்டு இத்தகைய 72 சம்பவங்கள் பதிவாகியிருந்தன. அதே சமயம் அச்சம்பவங்களை சமூக நலத்துறை கையாண்ட நிலையில், அனைத்து பச்சிளம் குழந்தைகளும் பாதுகாப்பாக இருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
கண்டெடுக்கப்படும் அல்லது பாதுகாப்பாக மீட்கப்படும் ஒவ்வொரு சிசுவுக்கும் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் உடனடி பாதுகாப்பு வழங்கப்படும். அதோடு விசாரணை நடத்துவது, சமூக அறிக்கையைத் தயார் செய்வது, உரிய நடவடிக்கை எடுப்பது என அடுத்தக் கட்டப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என Lim Hui Ying நாடாளுமன்றத்தில் விளக்கினார்.
பச்சிளம் குழந்தைகள் கைவிடப்படும் சம்பவங்களை எதிர்கொள்ள, சமூக நலத் துறை மற்றும் தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் மூலம் தடுப்பு, பாதுகாப்பு மற்றும் உடனடி நடவடிக்கை ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு அணுகுமுறைகளையும் அமைச்சு செயல்படுத்தி வருகிறது.
ஆலோசனை வழங்குவது, தாய், தந்தை, குடும்பத்தின் பொறுப்பு, சிறார் பாதுகாப்பு குறித்த சமூகக் கல்வி, சட்டச் சிக்கல்கள் பற்றிய தகவல் ஆகியவை அவற்றில் அடங்கும். இளையோருக்கான விழிப்புணர்வும் வழங்கப்பட்டு வருகிறது.
2006 ஆம் ஆண்டில் இருந்து கடந்தாண்டு வரை அத்திட்டங்களின் மூலம் 10 லட்சம் இளையோர் பலனடைந்ததையும் துணையமைச்சர் சுட்டிக் காட்டினார்.



