
மும்பை, ஜூலை-7 – இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் பெய்து வரும் இடைவிடாத கனமழை, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது.
இந்த மழையின் காரணமாக இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சோகமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இதில் சிக்கி 6 பேர் உயிரிழந்த வேளை மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் 200 மில்லி மீட்டர் முதல் 300 மில்லி மீட்டர் வரை மிகக் கடுமையான மழைப் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதோடு, பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக மும்பை விமான நிலையத்தில் விமான சேவைகள் சுமார் ஒரு மணி நேரம் தடைபட்டன; பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, மும்பை மற்றும் தானே மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை ஜூலை 8-ஆம் தேதி வரை நீடிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



