
சபா, ஜூலை 8 – சபா தாவாவ் (Tawau) நீதிமன்றம், குடிபோதையில் வாகனமோட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்ட 37 வயது ஆடவருக்கு இரண்டு நாட்கள் சிறைத் தண்டனையும் 17,000 ரிங்கிட் அபராதமும் விதித்துள்ளது.
அபராதத்தைச் செலுத்தத் தவறினால், மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், அவரது ஓட்டுநர் உரிமம் இரண்டு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி, தாவாவில் நடைபெற்ற சோதனை நடவடிக்கையின் போது, அவர் ஓட்டிய வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவரது இரத்தத்தில் 100 மில்லிலிட்டருக்கு 82 மில்லிகிராம் ‘ஆல்கஹால்’ இருப்பது கண்டறியப்பட்டது. இது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட 50 மில்லிகிராம் வரம்பை விட அதிகமாகும்.
குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், மனம் திருந்திவிட்டதாகவும், இனி இதுபோன்ற தவறை செய்யமாட்டேன் என்றும் கூறி தண்டனையை குறைக்குமாறு கோரினார். எனினும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவது பொதுமக்களின் உயிருக்கு கடும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், கடுமையான தண்டனை அவசியம் என அரசு தரப்பு வாதிட்டது.



