
கோலாலம்பூர், ஜூலை.08- அரசாங்கத்தின் சுகாதார மருத்துவமனைகளில் CCMS எனும் கிளவுட் அடிப்படையிலான இலக்கவியல் நிர்வாக முறையை அமல்படுத்தியதன் வழி நோயாளிகள் காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதோடு சுகாதாரச் சேவை வழங்கும் நடைமுறைகளும் வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துணையமைச்சர் Datuk Hanifah Hajar Taib தெரிவித்தார்.
அண்மைய கண்காணிப்புத் தரவுகளின்படி, 81 விழுக்காட்டு நோயாளிகள் தற்போது 60 நிமிடங்களுக்கு மருத்துவ அதிகாரியைச் சந்தித்துள்ளனர். எஞ்சிய 19 விழுக்காட்டினர், நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் மருத்துவமனைப் பணிச் சுமையைப் பொறுத்து, 60 முதல் 90 நிமிடங்களுக்குள் சிகிச்சை பெற்றுள்ளனர். சுகாதார அமைச்சு, CCMS முறையை MySejahtera செயலியுடன் ஒருங்கிணைத்து வருகிறது. அச்செயலி இன்றுவரை, தடுப்பூசிப் பதிவுகளைக் கொண்ட 30 மில்லியன் பேர், மருந்துச் சீட்டுப் பதிவுகளைக் கொண்ட 12 மில்லியன் பேர் உட்பட, மில்லியன் கணக்கான மலேசியர்களின் சுகாதாரப் பதிவுகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் பதிலளிக்கும் போது துணையமைச்சர் அவ்வாறு விளக்கினார்.
சுகாதார மையங்கள் மற்றும் பல் மருத்துவ மையங்களில் 18 வகையான சுகாதார சேவைகளுக்காக, MySejahtera செயலி மூலம் இதுவரை 29 மில்லியன் சந்திப்பு முன்பதிவகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வசதி, எதிர்காலத்தில் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவப் பிரிவுகளுக்கும், மேலும் பல்வேறு வெளிநோயாளிகள் சேவைகள் மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.



