
கூலாய், ஜூலை-8 – மலேசிய இந்தியக் கலைஞர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில், 70-களில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கலப்படம்’ எனும் பிரபலமான இசை நிகழ்ச்சி ‘மின்னல் எஃப்.எம்’ வானொலியில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜோகூர், கூலாயில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியைத் தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ சிங் தொடங்கி வைத்தார்.
இது குறித்துப் பேசிய அவர், “இந்தியக் கலைச் சங்கங்களின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்த நிகழ்ச்சி மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. உள்ளூர் கலைஞர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த மேடையாக அமையும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
முதற்கட்டமாக கூலாயில் தொடங்கப்பட்டுள்ள இந்த முன்னோடித் திட்டம், மக்களின் வரவேற்பைப் பொறுத்து அடுத்தாண்டு மேலும் பல இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றார் அவர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் மலேசியத் தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகமான FINAS சார்பில், ‘மடானி கலைஞர் நலத் திட்டம்’ மூலம் ஜோகூரைச் சேர்ந்த 5 கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
2023-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், இதுவரை 183 கலைஞர்கள் பயனடைந்துள்ளனர் எனக் குறிப்பிட்ட தியோ நீ சிங், படைப்பாற்றல் துறையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் நலனில் மடானி அரசாங்கம் தொடர்ந்து அக்கறை செலுத்தி வருவதை உறுதிப்படுத்தினார்.



