Latestமலேசியா

குவாந்தானில் வீட்டில் பரவிய தீயில் மாற்றுத் திறனாளி முதியவர் மரணமடைந்தார்

குவாந்தான், ஜூலை.08-பஹாங், குவாந்தானில் Taman Sri Mahkota Jaya எனுமிடத்திலே இரண்டு மாடி வீட்டில் ஏற்பட்ட தீயில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இரு கால்களை இழந்த அந்த மாற்றுத் திறனாளி கரும் புகையைச் சுவாசித்து மரணமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. 66 வயதான ஜி. விதலிங்கம் எனும் அம்முதியவரின் சடலம் தரைத்தளத்தில் உள்ள வரவேற்பறையில் இருந்த ஒரு படுக்கையில் கண்டெடுக்கப்பட்டது.

காலை 9.30 மணிக்கு அச்சம்பவம் குறித்து தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடர்ந்து எட்டு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பஹாங் தீயணைப்பு, மீட்புத்துறை இயக்குனர் Datuk Mohamad Razam Taja Rahim தெரிவித்தார். வீட்டிற்குள் யாரும் இல்லை என முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டதால், தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முன் கதவை உடைத்துத் திறந்தனர். வீடு முழுவதும் அடர்த்தியான புகை சூழ்ந்திருந்த நிலையில், காலை 9.50 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. அதன் பின்னரே வரவேற்பறையில் படுக்கையில் முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சம்பவத்தில் பலியான முதியவருக்கு எந்தத் தீக்காயங்களும் ஏற்படவில்லை; புகையை சுவாசித்ததால் அவர் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. தீ பரவிய போது அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். தீயில் வீடு சுமார் 15 விழுக்காடு சேதமடைந்ததாகவும் தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் Mohamad Razam குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!