
பாசீர் மாஸ், ஜூலை-11-மலேசிய-தாய்லாந்து எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 700 கிலோ கிராம் டுரியான் பழங்களை பொது நடவடிக்கைப் படை (PGA) அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கிளந்தான், பாசீர் மாஸ் பகுதியில் உள்ள Abe Li Posmen என்ற சட்டவிரோதப் பாதையில், கடந்த வியாழக்கிழமை மாலை 7.15 மணியளவில் இந்தச் சோதனை நடைபெற்றது.
எந்தவித முறையான ஆவணங்களும் இன்றி டுரியான் பழங்களைக் கடத்த முயன்ற 22 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஒருவரை அதிகாரிகள் கைதுச் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட டுரியான் பழங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு சக்கர வாகனம் என மொத்தம் 53,500 ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணையில், இதுவே அந்த நபர் ஈடுபடும் முதல் கடத்தல் முயற்சி என்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் இது போன்ற கடத்தல் சம்பவங்களைத் தடுக்க, பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.



