Latestமலேசியா

தேர்தலில் பாரிசான் நேஷனல் அமோக வெற்றி; இரண்டாம் தவணையாக மந்திரி பெசாராக ஓன் ஹஃபிஸ் பதவியேற்பு

ஜோகூர் பாரு, ஜூலை-13 – ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டத்தோ ஓன் ஹஃபிஸ் காசி இரண்டாவது முறையாக மாநில மந்திரி பெசாராக முறைப்படி பதவியேற்றார்.

புக்கிட் செரீன் அரண்மனையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு மற்றும் நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, ஜோகூர் மாநில இடைக்கால சுல்தான், துங்கு மகோத்தா இஸ்மாயில் அவர்களின் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

பதவி உறுதிமொழி ஏற்று, இரகசிய காப்பு பிரமாணத்திலும் ஓன் ஹஃபிஸ் கையெழுத்திட்டார்.

இந்த நிகழ்வில் மாநிலத்தின் உயர்மட்டத் தலைவர்களும், அரச குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

இந்த புதிய ஐந்தாண்டு பதவிக்காலத்தின் மூலம், மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல ஓன் ஹஃபிஸ் உறுதியளித்துள்ளார்.

​சனிக்கிழமைத் தேர்தலில் போட்டியிட்ட 56 மாநில சட்டமன்றத் தொகுதிகளில், 48 தொகுதிகளைக் கைப்பற்றி பாரிசான் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

இது கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்ற 40 தொகுதிகளை விட 8 இடங்கள் அதிகமாகும்.

மாச்சாப் சட்டமன்ற உறுப்பினரான ஓன் ஹஃபிஸ், முதன்முதலாக கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜோகூரின் 19-வது மந்திரி பெசாராகப் பொறுப்பேற்றார்.

இவ்வேளையில், மக்களின் பேராதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மாநிலத்தின் வெற்றி நாளைக் கொண்டாடும் வகையிலும், இன்று ஜூலை 13-ஆம் தேதியை ஜோகூரில் பொது விடுமுறையாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!