
பேங்கோக், ஜூலை-13 – தாய்லாந்து தலைநகர் பேங்கோக்கில் இன்று அதிகாலை நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் குறைந்தது 27 பேர் பலியாயினர்.
Na Ladprao என்ற மதுபான விடுதியில், நள்ளிரவு சுமார் 12 மணியளவில் மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்ட நிலையில், மேடைக்கு அருகில் உள்ள மின்சுற்றுப் பெட்டியில் (circuit breaker) புகை எழுந்ததாகவும், அதனைத் தொடர்ந்து வெடிச்சத்தம் கேட்டு தீ மளமளவென பரவியதாகவும் அங்கு இசை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்த கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
X தளத்தில் வைரலான வீடியோவில், பயங்கர வெடிப்புச் சத்தத்துடன் தீ கொழுந்து விட்டு எரிவதும், பலர் கத்திக் கொண்டே உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தலைத்தெறிக்க ஓடுவதும், சிலர் தடுமாறி கீழே விழுவதும் தெரிகிறது.
18 பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த சுமார் 60 பேர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விடுதியின் பின்புறம் உள்ள கழிவறைக்கு அருகில் பல உடல்கள் மீட்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், சுமார் 30 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் வருகை தந்த தாய்லாந்து பிரதமர் Anutin Charnvirakul, மீட்புப் பணிகளை நேரடியாகக் கண்காணித்து வருகிறார்.
தீ விபத்துக்கான உண்மைக் காரணம் குறித்து தடயவியல் ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதுபோன்ற பொது இடங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து கடுமையான ஆய்வுகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.



