
புருசெல்ஸ், ஜூலை-13-கடந்த மாத இறுதிவாக்கில் ஐரோப்பாவில் நிலவிய வரலாறு காணாத வெப்ப அலையின் போது, 10,000-க்கும் அதிகமான கூடுதல் இறப்புகள் பதிவாகின. இறந்தவர்களில் பெரும்பாலானோர் 65 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பம், வெப்பத் தாக்கத்தை ஏற்படுத்துவதன் மூலமோ அல்லது இருதய மற்றும் சுவாச நோய்களைத் தீவிரப்படுத்துவதன் மூலமோ மரணம் ஏற்படுகிறது. அதில் வயதானவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டின் ஜூன் மாத வாக்கில் மோசமான வெப்ப அலை காணப்படுவது அசாதாரணமானது. இது மிகவும் தீவிரமான நிலை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றம் மட்டுமின்றி, ஜூன் மாத இறுதியில் ஏற்பட்ட வெப்ப அலை மிகவும் அரிதானது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த காலநிலை மாற்றம் வெப்ப அலைகளை அடிக்கடி தீவிரமாக மாற்றி வருகிறது. ஜூன் மாத இறுதியில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலை, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மின்சார விநியோகத்தைத் துண்டித்தது. பள்ளிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.



