
ஜார்ஜ்டவுன், ஜூலை-13-பினாங்கில் கடந்தாண்டு ஆறாம் படிவ மாணவர்களுக்கான STPM தேர்வில் 3.50 மற்றும் அதற்கு மேற்பட்ட CGPA மதிப்பெண் பெற்ற 26 சிறந்த மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டனர்.
பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம் அவர்களின் அச்சாதனைக்கு அங்கீகாரம் வழங்கியது.
அவர்களில் ஏழு மாணவர்கள் 4.00 என்ற முழுமையான CGPA-ஐப் பெற்று, சிறந்த மாணவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வாழ்க்கையை மாற்றுவதற்கும், பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் கல்விதான் திறவுகோல் என்று நம்புவதால், அது அவ்வாரியத்தின் மிக உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாகத் தொடர்கிறது. அதன் அடிப்படையில் கல்வி மற்றும் சமூக நலனில் வாரியம் தொடர்ந்து கணிசமாக முதலீடு செய்து வருகிறது.
அவ்விழாவின் போது, 44 உயர்கல்வி மாணவர்கள் தங்கள் கல்வி இலட்சியங்களைத் தொடர RM40,800 நிதியுதவியும் வழங்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டு முதல், பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியம் கல்வி மற்றும் நலத் திட்டங்களுக்காக RM1.35 மில்லியனுக்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது.
இது அர்த்தமுள்ள மற்றும் நிலையான ஆதரவின் மூலம் சமூகத்தை மேம்படுத்துவதில் அவ்வாரியம் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் து பிரதிபலிக்கிறது.
இவ்விழாவை, மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணையமைச்சர் Lim Hui Ying தொடக்கி வைத்தார்.
அதில் பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத் தலைவர் R.S.N ராயர், துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆர். அருணாசலம், MBPP கவுன்சிலர் திரு. விஸ்வநாதன் தங்கவேலு ஆகியோரும் கலந்து கொண்டனர்.



