Latestமலேசியா

பட்டர்வொர்த்தில் காலமாகிவிட்ட தமது தந்தையின் வீட்டிலிருந்து இரு குண்டுகளைக் கண்டெடுத்த பெண்

பட்டர்வொர்த், ஜூலை.14- பினாங்கு, பட்டர்வொர்த்தில், உள்நாட்டு பெண் ஒருவர் வெடிகுண்டு போன்ற இரண்டு பொருட்களுடன் காவல் நிலையத்திற்குச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் காலமான அப்பெண்ணின் தந்தையின் வீட்டில் அக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக Seberang Perai Utara மாவட்ட காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் Anuar Abdul Rahman தெரிவித்தார்.

அப்பெண் வீட்டின் கிடங்கைச் சுத்தம் செய்து கொண்டிருந்த போது அதனைக் கண்டுபிடித்துள்ளார். அது எப்படி அங்கு வந்தது என்பது குறித்து அப்பெண்ணுக்குத் தெரியவில்லை. அவ்வீட்டில் இதற்கு முன் 60 வயது மதிக்கத்தக்க அப்பெண்ணின் தந்தையும் தாயும் வசித்து வந்துள்ளனர். அப்பெண்ணின் தந்தைக்குச் சொந்தமான பழைய பொருட்களைச் சேமித்து வைக்க அக்கிடங்கு கடந்த 20 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அவர் இறந்ததிலிருந்து அந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

இவ்வேளையில், பினாங்கு காவல்துறைப் படைத் தலைமையகத்தின் வெடிகுண்டு அகற்றும் பிரிவு மேலதிக ஆய்வுக்காக சம்பவ இடத்திற்கு வந்ததாக Anuar Abdul Rahman கூறினார். அக்குண்டுகள் வெடிபொருட்கள்அல்ல. அவை எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாத இராணுவப் பயிற்சி மோட்டார் குண்டுகள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!