Latestமலேசியா

டுரியான் துங்கால் அணைக்கட்டு அருகே மனித உடல் பாகங்கள் மீட்பு; மலாக்கா குடிநீர் பாதுகாப்பாக உள்ளது – மாநில அரசு

மலாக்கா, செப்டம்பர்-14,மலாக்கா,டுரியான் துங்கால் அணைக்கட்டு சேமிப்புப் பகுதி அருகில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாதுகாப்பாகவே உள்ளதாக மாநில அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

அச்சம்பவத்தை அடுத்து​தொடர்ச்சியான நீர் தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், குடிநீர் நிர்ணயிக்கப்பட்ட சுகாதார தரநிலைகளுக்கு உட்பட்டே உள்ளதாகவும் மலாக்கா மாநிலச் செயலாளர் டத்தோ சல்ஹா சாலே (Salhah Salleh) தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குடிநீர் விநியோகத்திற்கு எவ்வித பாதிப்பையும் அல்லது மாசுபாட்டையும் ஏற்படுத்தவில்லை என்றார் அவர்.

எனவே, பொது மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், சம்பவம் தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

​நேற்று அப்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 3 பேர், சிமெண்ட் பூசப்பட்ட நீல நிற பீப்பாய் ஒன்றுக்குள் மனித எலும்புகள் இருப்பதைக் கண்டு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்த உடல் சுமார் 3 வாரங்களுக்கும் மேலாக அழுகிய நிலையில் இருந்திருக்கலாம் என அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் அஹ்மாட் அபு பாக்கார் தெரிவித்தார்.

​இச்சம்பவம் கொலை வழக்காகப் பதிவுச் செய்யப்பட்டு விசாரணை நடைபெறும் நிலையில், சவப் பரிசோதனைக்காக உடல் பாகங்கள் மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் காணாமல் போயிருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்புகொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!