
கோலாலம்பூர், ஜூலை 15 – 2025 முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை மலேசியாவில் 95,638 இணைய மோசடி வழக்குகள் பதிவாகி, மொத்தம் 3.8 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசூத்தியோன் இஸ்மாயில் (Datuk Seri Saifuddin Nasution Ismail) தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டில் 66,204 வழக்குகள் பதிவாகி 2.97 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை 29,434 வழக்குகள் பதிவாகி 827.73 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மோசடிகளில் தொலைபேசி மோசடி (Phone Scam), காதல் மோசடி (Love Scam), மின்னணு வர்த்தக மற்றும் நிதி மோசடிகள், போலி கடன் மற்றும் முதலீட்டு மோசடிகள் உள்ளடங்கும்.
மேலும், தேசிய மோசடி பதிலளிப்பு மையம் (NSRC) மூலம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில், 2025ஆம் ஆண்டில் 6.65 மில்லியன் ரிங்கிட்டும், இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை 3.57 மில்லியன் ரிங்கிட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.



