Latest
LRT3-இல் தொழில்நுட்பக் கோளாறு – யாருக்கும் காயம் இல்லை

NITTHIYA NEWS 2
ஷா ஆலம், ஜூலை 15 – ஷா ஆலம் LRT3 (Shah Alam Line) ரயிலில் ஜூலை 4-ஆம் தேதி ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று ரேப்பிட் கேஎல் (Rapid KL) தெரிவித்துள்ளது.
மாலை 7.05 மணியளவில் ஷா ஆலம் ஸ்டேடியம் நிலையத்தில், ரயிலின் ஒரு உதிரிபாகம் மின் கடத்தியுடன் (power conductor) உரசியதால் சிறிய வெடிப்புச் சத்தமும் தீப்பொறிகளும் ஏற்பட்டன.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட ரயில் உடனடியாக சேவையிலிருந்து அகற்றப்பட்டு, பயணிகள் அடுத்த நிலையத்தில் இறக்கப்பட்டு மற்றொரு ரயிலில் பயணத்தைத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டது.
பழுதடைந்த உதிரிபாகம் மாற்றப்பட்டு, பாதுகாப்பு பரிசோதனைக்குப் பிறகு அந்த ரயில் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. மற்ற ரயில்களிலும் முன்னெச்சரிக்கையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ரேப்பிட் கேஎல் தெரிவித்துள்ளது.



